ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது


வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து வெளியிடும் இந்த படத்தின் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஆளுமைகளைக் கொண்டாடும், இதுவரை சொல்லப்படாத கதைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் எப்போதும் ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த திரைப்படம் தற்போது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை சந்திக்க தயாராகி வருகிறது.

வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், ட்ரைகலர் பிலிம்ஸுடன் இணைந்து தயாரிக்கும், ஆர். மாதவன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம், புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்த படம் வரும் ஜூலை மாதம் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த அறிவிப்புடன், படக்குழு மாதவன் இடம்பெறும் புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் ரசிகர்கள் மற்றும் திரையுலகில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ஜி.டி. நாயுடுவாகவே தோற்றத்திலும் நடிகர் மாதவன் மாறியிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகுமார் ராமகுமார் எழுதி இயக்கியுள்ள இந்த திரைப்படம், 'இந்தியாவின் எடிசன்' என்றும் 'வெல்த் கிரியேட்டர் ஆஃப் கோயம்புத்தூர்' என்றும் அழைக்கப்படும் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அத்தியாயத்தை ரசிகர்களுக்கு கொண்டு செல்கிறது. பல துறைகளில் அவரது புரட்சிகரமான யோசனைகள் மற்றும் முன்னோடியான பங்களிப்புகள் காரணமாக ஜி.டி. நாயுடு இந்தியாவின் புகழ்பெற்ற கண்டுபிடிப்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தேசிய விருது வென்ற 'ராக்கெட்டரி: தி நம்பி எஃபெக்ட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு, வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் மீண்டும் இணைந்து, இந்தியாவின் பாரம்பரியமும் சாதனைகளையும் பேசும் ஊக்கமளிக்கும் கதையை கொண்டு வருவதால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறை வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படத்தை வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் சார்பில் வர்கீஸ் மூலன் மற்றும் விஜய் மூலன் ஆகியோரும், ட்ரைகலர் பிலிம்ஸ் சார்பில் ஆர். மாதவன் மற்றும் சரிதா மாதவன் ஆகியோரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஆர். மாதவன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படம் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள பார்வையாளர்களைச் சென்றடைவதை உறுதிசெய்யும் வகையில், தயாரிப்பாளர்கள் புகழ்பெற்ற விநியோக நிறுவனங்களுடன் கைகோர்த்துள்ளனர். தமிழகத்தில் இப்படத்தின் திரையரங்கு வெளியீட்டை ஏஜிஎஸ் சினிமாவும், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில் ஸ்பிரிட் மீடியாவும், வெளிநாடுகளில் ஏபி இண்டர்நேஷனலும், கேரளாவில் ஊர்வசி தியேட்டர்ஸூம் விநியோகிக்கவுள்ளன. 

படத்தயாரிப்புடன் நெருங்கிய தொடர்புடைய வட்டாரங்களின் தகவலின்படி, படப்பிடிப்பு நடைபெற்ற காலம் முழுவதும் மிகவும் நேர்மறையான மற்றும் உற்சாகமான சூழல் நிலவியது. இதற்குப் படக்குழுவினர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் ஒத்துழைப்பே முக்கியக் காரணம். மாதவனின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் படக்குழுவினர் வியந்து பாராட்டியுள்ளனர். சமீப ஆண்டுகளில் அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களிலேயே மாறுபட்ட பரிணாமத்தில் அவரை இந்த படத்தில் பார்க்கலாம் என்கின்றனர். 

படப்பிடிப்புப் பணிகள் தற்போது நிறைவடைந்து, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. பார்வையாளர்களுக்கு உத்வேகம் அளிக்கும் மற்றும் உணர்வுபூர்வமாக ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை வரும் ஜூலை மாதம் இந்தப் படம் தர இருக்கிறது. படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் அறிவிக்கப்படும்.

Comments

Popular posts from this blog

டாக்டர் ஷீபா லூர்தஸ் – சமூக நாயகி, உலகளாவிய மேதை, பாரம்பரியத் தூதர்

Supreme Court directs Centre and State Government to provide food and financial aid to sex workers

சமூக அவலங்களை எதார்த்தமாகவும் கமர்ஷியலாகவும் பேசும் ‘அப்பு’! - அக்டோபர் 4 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது