'சிங்கா': இந்தியாவில் முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் எடுக்கப்படும் முழுநீளத் திரைப்படம்
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் ஷ்ரிதா ராவ் முதன்மை வேடத்தில் நடிக்கிறார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக உண்மையான சிங்கத்துடன் முழுநீளத் திரைப்படம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது. 'சிங்கா' என்ற பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.
'உலக நாயகன்' கமல் ஹாசனின் உதவி இயக்குநரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான கே.சி. ரவிதேவன் இயக்கும் 'சிங்கா' திரைப்படத்தில் 'லெனின் பாண்டியன்', பிரபு சாலமன் இயக்கத்தில் 'கும்கி 2' உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்ரிதா ராவ் நாயகியாக நடிக்கிறார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் 'சிங்கா', வி. மதியழகன் தயாரிக்கும் 14வது படமாகும். இதற்கு முன் 'அப்பா', 'கொலையுதிர் காலம்', 'மகா', 'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன', 'சாமானியன்' உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கதை, திரைக்கதை அமைத்து இப்படத்தை இயக்கி வரும் கே.சி. ரவிதேவன் கூறுகையில், "சவாலான இப்படத்தை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கி வருகிறோம். நாயகியாக நடிக்க முன்னணி நடிகைகள் சிலரை அணுகிய போது, அவர்களுக்கு கதை பிடித்திருந்த போதிலும் நிஜ சிங்கத்துடன் நடிக்க தயங்கினர். ஆனால் ஷ்ரிதா ராவ் துணிச்சலுடன் நடிக்க முன் வந்ததோடு, சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்.
இப்படத்தில் உள்ள ஒரு எதிர்மறை பெண் கதாபாத்திரம் 300 ஓநாய்களுடன் நடிக்க வேண்டி இருந்தது. அதற்கு உகந்த, பயப்படாத நடிகையை கடுமையான தேடலுக்கு பிறகு கண்டறிந்தோம். '1945', 'பொதுநலன் கருதி' மற்றும் 'ஜவான்' உள்ளிட்ட படங்களில் நடித்த லீஷா எக்லேர்ஸ் இந்த வேடத்தை திறம்பட செய்துள்ளார்.
மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, ஜாம்பியா, கோவா, தென்காசி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மொழிகளைக் கடந்த கதை இது என்பதால், 'சிங்கா' படத்தை பான்-இந்தியா திரைப்படமாக எடுத்து வருகிறோம். இப்படத்தை சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிப்பார்கள் என நம்புகிறோம்," என்றார்.
'சிங்கா' திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்க, வசனங்களை கண்ணன் செல்வராஜ் எழுதுகிறார். ஒளிப்பதிவுக்கு பி.ஜி. முத்தையா, கலை இயக்கத்திற்கு ஹாசினி பவித்ரா, படத்தொகுப்புக்கு தமிழ் அரசன், சண்டைப் பயிற்சிக்கு ஸ்டன்னர் சாம், மக்கள் தொடர்புக்கு நிகில் முருகன் பொறுப்பேற்றுள்ளனர். உடைகள் வடிவமைப்பு: தக்ஷா தயாள்; சிஜி: பிக்சல் ஆர்ட்ஸ்; ஸ்டில்ஸ்: முத்துக்குமார் எஸ்; பாடல்கள்: விவேகா, பா. விஜய்; நடனம்: ஷோபி பால் ராஜ், ஈஷ்வர் பாபு, ரகு; வர்த்தக நிர்வாகி: உமாபதி ராஜா; தயாரிப்பு நிர்வாகி: வி. பாக்யராஜ்; பப்ளிசிட்டி டிசைன்: டிவென்டி.ஒன்.ஜி.
எட்செட்ரா என்டெர்டெயின்மென்ட் பேனரில் வி. மதியழகன், தித்திர் ஃபிலிம் ஹவுஸ் உடன் இணைந்து தயாரிக்க கே.சி. ரவிதேவன் இயக்கத்தில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படமாக உருவாகி வரும் 'சிங்கா' வேகமாக வளர்ந்து வருகிறது.
Comments
Post a Comment