விஷாலை போல் அதிரடி காட்ட விரும்பும் அறிமுக நாயகன் ஹரிஷ்(Harish)

'குழந்தை' என்ற குறும்படத்தின் மூலம் இணையத்தில் உலாவும் இளைய தலைமுறையினரை கவர்ந்திருப்பவர் நடிகர் ஹரிஷ். இவர் தற்போது தயாராக இருக்கும் பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். 

விரைவில் தொடங்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பிற்காக இயக்குனரின் வேண்டுகோளை ஏற்று உடற்பயிற்சி, நடனம், சண்டை காட்சி ஆகியவற்றில் தீவிரமாக பயிற்சி பெற்று வருகிறார்.
இவரை சந்தித்து கொரோனா சூழலில் தமிழ் திரை உலகில் அறிமுகமாவது குறித்து கேட்டபோது,'' தமிழ் திரை உலகில் நடிகனாக வேண்டும் என்பது என்னுடைய பால்ய காலத்து கனவு. பள்ளிக்கு செல்லும் காலகட்டத்தில் பள்ளிகளுக்கிடையே  நடைபெறும் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு வெற்றி பெற்று பரிசுகளை வாங்கியிருக்கிறேன். 

யாரையும் எளிதில் கவர்ந்து விடும் தோற்றப்பொலிவு இருந்ததால், என்னுடைய நண்பர்களும், உறவினர்களும்,' உன்னால் திரைத்துறையில் சாதிக்க இயலும். செங்கல்பட்டில் பிறந்த நீ சாதனையாளராக உயர்வாய்' என்று உற்சாகப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். இத்தகைய உந்துதலால் நான் தொடர்ச்சியாக திரைப்படங்களை பார்ப்பதும், நடிப்பில் என்னை மெருகேற்றிக் கொள்வதையும் பயிற்சியாகவே மேற்கொண்டேன்.

இந்நிலையில் இயக்குனர் சுப்பு சுப்பிரமணியன் என்பவர் என்னைச் சந்தித்து 'குழந்தை ' என்ற குறும்படத்தின் கதையை கூறி, கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். கதையைக் கேட்டபிறகு நடிக்க ஒப்புக் கொண்டேன். தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. குறும்படத்தில் நடிக்கும் பொழுது நடிப்புத் தொடர்பான வெவ்வேறு நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொண்டேன்.

நேர்மையாகவும், கடினமாகவும் உழைத்தால் வெற்றி பெறலாம் என்ற விஷயத்தையும் உணர்ந்துகொண்டேன். இந்த குறும்படத்தின் மூலம் திரை உலகில் ஏராளமான தொடர்புகளும் கிடைத்தது. இதன் காரணமாக நான்கு குறும்படங்களில் நடித்து வருகிறேன். விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் தொலைக்காட்சித் தொடர்களிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறேன். தொடர்ந்து திரை உலகில் முயற்சி செய்து கொண்டிருந்தபோது என்னுடைய பெற்றோர் திருமணம் குறித்து முடிவு என்ன ? என கேட்ட போது, திரை உலகில் சாதித்த பிறகே திருமணம் என்று வாக்குறுதி அளித்தேன். தற்போது அவர்கள் அனைவரும் என்னுடைய வெற்றிக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்கள்.

எந்த கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என்னுடைய தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்வதற்காக, பல்வேறு மனிதர்களை கவனித்து, அவர்களின் உடல் மொழி, பேச்சு மொழி, அவர்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மற்றும் பாவனைகளை உற்று கண்காணித்து பதிவு செய்து கொள்கிறேன். ஆக்ஷன் படங்களில் நடிக்கவே அதிக விருப்பம் உண்டு. குறிப்பாக நடிகர் விஷாலை போல் அதிரடி ஆக்ஷன் நாயகனாக வரவேண்டுமென்ற ஆசையும் இருக்கிறது ''என்றார்.
நல்ல உயரம், கணீரென்ற குரல், தெளிவான உச்சரிப்பு, துல்லியமான நோக்கம், தோழமையுடன் கூடிய அணுகுமுறை என பல அம்சங்கள் இவரிடம் இருப்பதால், விரைவில் தமிழ் சினிமாவில் நல்லதொரு மண் மணம் கமழும் நாயகனாக வலம் வருவார் என்பது உறுதி

Comments

Popular posts from this blog

‘மாயவன் வேட்டை’ திரைப்பட விமர்சனம்

கலன் திரைப்படத்தின் முதல் பார்வை இன்று வெளியாகி உள்ளது

மண்வாசம் கலந்த மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் நின்னு விளையாடு